×

கர்நாடகாவில் கொட்டித்தீர்க்கும் பலத்த மழை: உயரும் கபினி அணை நீர்மட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து 10781 கனஅடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 8ம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜூலை 1ம் தேதி வரைகூட கேரளா, கர்நாடகாவில் தீவிரமடையவில்லை. கர்நாடகா மாநிலம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை சந்தித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது. 11 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவான அளவே பருவமழை பெய்தது.

ஜூன் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய அளவை விட மிக குறைவாகவே மழை பெய்த காரணத்தால் அங்குள்ள அணைகளின் நீர் மட்டம் குறைய தொடங்கியது.தமிழகத்தின் பங்கான காவிரி நீரை திறந்து விடக்கோரி தமிழக அரசு வலியுறுத்தியது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் குறுவை சாகுபடி தப்புமா என்று விவசாயிகள் கவலையடைந்தனர். அதே நேரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் மைசூரு, மாண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் பிரச்னைக்கு ஒரே தீர்வு வருணபகவான் மனது வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா மாநில விவசாயிகள் இயற்கையிடம் வேண்டுதல் வைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ள‌ பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மலை பகுதிகளில் தொடரும் மழையால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் காவிரி, கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post கர்நாடகாவில் கொட்டித்தீர்க்கும் பலத்த மழை: உயரும் கபினி அணை நீர்மட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Rising Kabini Dam ,Bengaluru ,Krishnaraja Sagar ,Kabini Dam ,Caviri ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...